Chapter 66

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
மறுநாள் காலையில் விக்ரம் தயாராகி வந்து அவனது பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு கோயிலுக்கு புறப்பட்ட தயாராகி கொண்டிருந்தான். சனந்தாவும் பார்த்து பார்த்து தன்னை தயார் படுத்திக் கொண்டு இருவரும் உணவருந்தி விட்டு கோவிலுக்கு சென்றனர்.

இருவரும் கோவிலுக்கு செல்லவும் அங்கே பாட்டி அமர்ந்திருந்தார். அவரை பார்த்ததும் சனந்தா அர்த்தமாக புன்னகைக்க, பாட்டியும் புன்னகைத்து விக்ரமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார். “ரொம்ப காக்க வெச்சிடாத உனக்கு பிடிச்ச தேவதைய சீக்கிரம் கூட்டிட்டு வந்துரு ஊருக்கு” என்று பாட்டி விக்ரமை பார்த்து கூறி சென்றார்.

“இந்த பாட்டி யார சொல்லிட்டு போறாங்கன்னு தெரியலையே” என்று விக்ரம் கேள்விக்குறியாக பார்க்க, சனந்தா புன்னகைத்து வாங்க சாமி கும்பிடலாம் என்று அழைத்து சென்றாள். இருவரும் சாமியை தரிசித்து வந்து அங்கே இருக்கும் திண்ணையில் அமர்ந்து கொண்டனர்.

“ஆமா எப்போ ஊருக்கு கிளம்புற??” என்று விக்ரம் கேட்க, “ஏன் நீங்க அதையே திருப்பி கேக்குறீங்க??” என்று சனந்தா கேட்கவும், “உனக்கு என்ன நீ ஊருக்கு போயிட்டு உங்க அம்மா அப்பா உன்னோட சீனியர் ஃபிரண்ட்ஸ் இவங்க எல்லாரையும் பார்த்துட்டு சந்தோஷமா இருந்துட்டு வருவ…. இங்க எனக்கு அப்படியா… அதுலயும் இன்னிக்கு என்னை விட நீ தான் அழகா ரெடி ஆகிட்டு வந்து இருக்க, இப்படி இருக்கும் போது எனக்கு தான் கஷ்டமா இருக்கும் உன்னை விட்டுட்டு இங்க தனியா இருக்குறது” என்று விக்ரம் கூறிய தோரணையில் சனந்தா சிரித்து விட்டாள்.

“என்ன தான் நான் அங்க எல்லார்கூடயும் டைம் ஸ்பென்ட் பண்ணாலும் உங்களுடைய யோசனை எப்பவுமே எனக்குள்ள இருந்து கிட்டே தான் இருக்கும்… அண்ட் உங்களுக்கு என்ன கொறச்சல், நீங்க எப்பவுமே போடுற யூனிஃபார்மே உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும், அதுவும் இல்லாம இன்னிக்கு புது ஷர்ட் போட்டு ரொம்ப ஹாண்ட்சம்மா தான் இருக்கீங்க” என்று சனந்தா கூறினாள்.

சனந்தா கூறியதில் விக்ரம் அவனது நெஞ்சில் கையை வைத்து, “ஐயோ பூனைக்குட்டி இப்படி எல்லாம் பேசினா நான் உன்ன வீட்டுக்கு அனுப்பவே மாட்டேன்” என்று விக்ரம் கூறினான். “ஆசை தான் உங்களுக்கு” என்று சனந்தா கூற, “ஆமா ஆசை தான்!!!! ஆசை தான்!!!!! இந்த ரெண்டு நாள் நீ பேச ஆரம்பிச்சதுக்கே என்னால என்னை கண்ட்ரோல் பண்ணிக்க முடியலையே!!!” என்று விக்ரம் முணுமுணுத்துக் கொண்டான்.

சனந்தாவிற்கு அவன் கூறியது காதில் விழுந்தாலும் அதைப் பற்றி எதுவும் பேசாமல் அமைதியாகி விட்டாள். சிறிது நேரத்தில் விக்ரம் அவனுடைய ஆஃபீஸ்க்கு செல்லவும் சனந்தா பள்ளிக்கு சென்று அவளுடைய வேலையை முடித்தாள்.

“மச்சான்!!! நீ வேணா இங்கேயே இருடா நானும் அபிலாஷ்… இல்லனா கௌதம வேணா கூப்பிடுறேன் நாங்க வேணா போய் பார்த்துட்டு வரோம் என்னன்னு” என்று சரவணன் கூற, “இல்ல சரவணா நானே வந்து எல்லாமே தெரிஞ்சுக்கணும்னு ஆசைப்படுறேன்… வா நம்ம ரெண்டு பேரே போகலாம்” என்று விக்ரம் கூறவும் சரி என்று இருவரும் சென்றனர்.

இன்று விக்ரமின் பிறந்த நாள் என்பதால் சனந்தா அவனுடன் சேர்ந்து மதிய உணவை சாப்பிடலாம் என்று அவனுக்காக காத்திருக்க அவளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அவனுக்கு ஃபோன் செய்ய அவன் ஃபோனை எடுக்கவில்லை. “சரவணனும் வேற ஃபோன் எடுக்கல ஒரு வேளை பிஸியா இருக்காரோ…. நான் காலையிலேயே சொல்லி இருந்தா கூட அவர் சரியான நேரத்துக்கு வந்திருப்பாரோ” என்று சனந்தா யோசித்துக் கொண்டிருக்க, கௌதம் வந்து சேர்ந்தான்.

சனந்தா அவனிடம் சென்று, “அவர் எங்கேன்னு பார்த்தியா நீ??” என்று கேட்க, “இல்ல ஏதோ வேலையா சரவணனும் விக்ரமும் இரண்டு பேரும் போயிருக்காங்க எங்க போயிருக்காங்கன்னு தெரியல” என்று கௌதம் கூறவும், “சரி ஏதோ முக்கியமான விஷயமா இருக்கும்” என்று அவனுக்கு கூறுவது போல் அவளுக்கும் சமாதானம் கூறிக் கொண்டாள் சனந்தா

“ஏய்… அவங்க வேலைய பார்த்துட்டு வந்துருவாங்க நீ ஏன் அதுக்குள்ள மூஞ்சிய இப்படி மாத்துற போய் சாப்பிடு போ” என்று கௌதம் கூறவும் சரி என்று ஆமோதித்து சென்றாள் சனந்தா.

சரவணன் மற்றும் விக்ரம் சென்று வேலையை முடித்துக் கொண்டு வர இரவு ஆனது. சரவணன் வண்டியை ஓட்ட விக்ரம் அருகில் அமர்ந்து கொண்டு வந்தான். “என்ன டா இவ்வளவு பெரிய பிரச்சனை நடந்திருக்கு ஆனா, அப்புவும் நம்ம கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லையே டா” என்று சரவணன் ஆதங்கத்துடன் கேட்க,

“எனக்கும் அது தான் புரியலடா…. அப்பு ஏன் இதை சொல்லாம இருந்தான்னு எனக்கும் தெரியல…. அதுவும் அந்த ஆள் கூட பிரச்சனை…. ப்ச், காளிக்கும் நம்ம ஊருக்கும் முதல்ல இருந்தே ஆகாது இப்போ இவ கூடயும் தனிப்பட்ட முறையில பிரச்சனை பண்ணி இருக்காரு…. ஒரு வேளை இது தான் காரணமோ பார்ட்டில நடந்த விபத்துக்கு” என்று விக்ரம் கேட்க,

“அது நமக்கு தெரியல அதுக்கு ஒண்ணு சனந்தாவுக்கு எல்லாம் ஞாபகம் வரணும்… இல்லனா காளி தான் வந்து வாய தொறக்கணும்…. காளி வாயை திறக்க வாய்ப்பே இல்லை…. சனந்தாவுக்கு ஞாபகம் வரர்து மட்டும் தான் ஒரே வழி” என்று சரவணன் கூறினான்.

“என்னமோடா ஒண்ணுமே இல்லாம இருந்ததுக்கு இப்ப ஏதோ ஒரு வழி கிடைக்குதுன்னு நான் சந்தோஷப்படவா.. இல்ல எப்படி எடுத்துக்கிறதுன்னு எனக்கு தெரியல மச்சான்” என்று விக்ரம் கூற, “உனக்கு உண்மை தெரிய வருதுன்னு யோசி டா, அப்படித் தான் உன்னால இத கடந்து வர முடியும்” என்று சரவணன் ஆறுதல் கூறினான்.

“நேத்து நைட் அப்புவ நினைச்சு ரொம்ப கஷ்டமா இருந்தது… சரியா அந்த நேரத்துல லேசா மழை சாரல் வந்ததும் எனக்கு என்னனு தெரியல அப்புவே எனக்கு நேத்து பர்த்டே விஷ்ஷஸ் சொன்ன மாதிரி அவ்வளவு சந்தோஷமா இருந்துது… பார்த்தா இன்னிக்கு காலையிலேயே இப்படி ஒரு விஷயம் நமக்கு தெரிய வருது” என்று விக்ரம் வருத்தத்துடன் கூற,

“விக்கி என்னிக்கா இருந்தாலும் உண்மை வெளியில வரும்…. வெளியில வரும் போது அதை நம்ம தைரியமா ஃபேஸ் பண்ணி தான் ஆகணும் சரியா….. உன் பிறந்த நாள் அன்னிக்கு வருதே… அப்புவ பத்தி நினைச்சா வருதே… அப்படின்னு இதெல்லாம் யோசிச்சு நீ மனசை போட்டு குழப்பிக்காத எல்லாம் நன்மைக்கே மச்சான்” என்று சரவணன் ஆறுதல் கூற, விக்ரம் சரி என்று தலையை அசைத்தான்.

“சரி, சனா கிட்ட பேசினியா அவ உனக்கும் ஃபோன் பண்ணி இருக்கா இரண்டு வாட்டி…. எனக்கும் ஒரு வாட்டி ஃபோன் பண்ணி மெசேஜ் பண்ணி இருக்கா” என்று சரவணன் கூற, “இல்லடா நம்ம காலேஜ்ல இருந்தப்போ ஃபோன் பண்ணா…. அப்ப எடுக்க முடியல இன்னொரு வாட்டி பண்ணும் போதும் பேசிட்டு இருந்தோம் அதான் எடுக்கல….. ஒரு வேளை சாப்பிடாம எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காளோ என்னவோ தெரியல” என்று விக்ரம் கூறவும், “அவ செஞ்சாலும் செய்வா ஒரு ஃபோன் பண்ணிடு அவளுக்கு” என்று சரவணன் கூற, சரி என்று விக்ரம் கூறி சனந்தாவிற்கு ஃபோன் செய்தான்.

சனந்தா ஆர்வத்துடன் ஃபோனை அட்டென்ட் செய்து, “ஹலோ!!! எங்க இருக்கீங்க?? சாப்பிட்டீங்களா? எங்க போனீங்க??” என்று ஒவ்வொரு கேள்வியாக அடக்கிக் கொண்டே போக, “நான் வர லேட் ஆகும் நீ சாப்பிட்டு தூங்கிடு நம்ம நாளைக்கு பேசலாம்” என்று விக்ரம் கூறினான்.

விக்ரம் குரலில் இருந்த மாற்றம் சனந்தாவுக்கு எதையோ உணர்த்த, “சரி ஓகே நீங்க வாங்க நான் உங்களுக்காக மாடியில காத்துட்டு இருப்பேன்” என்று சனந்தா கூறவும், “இல்ல நீ தூங்கிடு நாங்க வர எப்படியும் லேட் ஆகும்” என்று விக்ரம் கூறவும், “சரி ஓகே நீங்க முதல்ல வாங்க” என்று சனந்தா கூறி ஃபோனை வைத்தாள்.

சனந்தா மீண்டும் வந்து அவளது வேலையில் உட்கார அருகில் கௌதம் அவளை பார்த்து, “என்னடி ஃபோன் வந்துருச்சா??? சந்தோசமா?? நிம்மதியா சாப்பிட்டு தொல அவங்களும் கண்டிப்பா சாப்பிட்டு வருவாங்க சரியா… சாப்பிடாம என்னத்த தான் பண்ணுவியோ எனக்கு ஒண்ணுமே புரியல” என்று கௌதம் சலித்துக் கொண்டான்.

“இல்ல அவங்க வந்துட்டு இருக்காங்கன்னு தான் நினைக்கிறேன் வண்டி சத்தமும் காத்து சத்தமும் அப்படித் தான் கேக்குது… அவங்க வந்திடட்டும் அதுக்கப்புறம் நான் சாப்பிட்டுக்குறேன்” என்று சனந்தா கூற,

“என்னத்தையோ பண்ணி தொல… இதோ நீ சொன்ன வேலை எல்லாம் முடிச்சிட்டேன்…. நம்ம எவ்வளவு சேர்த்து வெச்சிருக்கோம்னு பாரு… அந்த வெயிட் போதுமான்னு மட்டும் பார்த்துக்க… நாளைக்கு போகும் போது எடுத்துட்டு போயி சீனியர் கிட்ட குடுத்துட்டு வந்தோம்னா அவரு ப்ராசஸ்க்கு அனுப்பிடுவாரு” என்று கௌதம் கூறவும், “போதும்ன்னு தான் நினைக்கிறேன் எதுக்கும் எக்ஸ்ட்ராவாவே தானே வெச்சிருக்கோம்” என்று சனந்தா கூறினாள்.

“சரி இந்த ரீசர்ச் வேலை முடியவே நமக்கு கொஞ்சம் மாசம் ஆயிடும்…. அதுக்கு முன்னாடியே உனக்கு இங்க இந்த வாலன்டியர் பீரியட் முடிஞ்சுரும் என்ன பண்றதா இருக்க??: என்று கௌதம் கேட்க,

“இந்த ரீசர்ச்ச சாக்கா வெச்சு இன்னொரு ஆறு மாசம் எக்ஸ்டெண்ட் பண்ணிக்கலாம்னு இருக்கேன்” என்று சனந்தா கூறவும், “நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தான்…. ரெண்டு நாளைக்கு முன்னாடி, “இல்ல நான் வேலையை முடிச்சிட்டு நான் போயிடுறேன் நான் போயிடுறேன்னு பேசினா வாய் தானே இது” என்று கௌதம் கேலி செய்ய,

“சரி சரி ரொம்ப ஓட்டாத நான் ஒரு வேளை அவர் கிட்ட பேசாம இருந்திருந்தன்னா கூட இந்த ரீசர்ச் வேலைக்காக நான் கண்டிப்பா இங்க வர மாதிரி தான் இருந்திருக்கும் அப்பப்போ….. இங்க தானே இந்த செடியெல்லாம் எடுத்து ஃப்ரீயா யூஸ் பண்ணிக்க முடியும்… இல்லன்னா நம்ம நிலைமை ரொம்ப கஷ்டமா போயிருக்கும் நமக்கு” என்று சனந்தா கூறினாள்.

“ஆன்… ஆமா டி அதுவும் சரி தான்… இல்லன்னா எந்த ஊருக்கு தேடிப் போய் இருக்கணுமோ நம்ம” என்று கௌதம் கூறினான். “நீ என்னமோ இங்க வர ரொம்ப சலிச்சுக்கிற மாதிரி பேசுற…. நானாவது இந்த வாலன்டியர் வேலை சாக்கு இருக்கு, ரீசர்ச் சாக்குனு இருக்கு உனக்கு எந்த சாக்குமே இல்லனாலும் சும்மா கூட வந்து இங்க ஆன்னு உக்காந்து பார்த்துட்டு இருப்ப கவிதாவ” என்று சனந்தா கூறவும்,

“நீ சொல்லலனாலும் அது தான் உண்மை” என்று கௌதம் கூறி, “நாள பின்ன ஒரு வேளை அவங்க அப்பா எதுவும் பிரச்சனை பண்ணா என்ன பண்ணுவ??” என்று சனந்தா கேட்க, “லூசா நீ… அவளுக்கு புடிச்சிருக்கு அப்படின்னு அவ நம்பிட்டாலே அவங்க அப்பாவுக்கு அதுவே ஒரு நம்பிக்கை கொடுக்கும்…. அது விக்ரமாவும் இருக்கட்டும் நானா இருக்கட்டும் இல்ல யாரா வேணா இருக்கட்டும்…. இந்த ஊர்ல தான் இருக்கணும் அப்படி எல்லாம் எதுமே தோணாது அவருக்கு” என்று கௌதம் கூறினான்.

“எப்படிடா இவ்ளோ பாசிட்டிவா யோசிக்கிற நீ??” என்று சனந்தா கேட்க, “பின்ன எவ்ளோ அடி வாங்கியிருப்பேன்…. அப்ப இவ்வளவு கூட யோசிக்கலனா எப்படி” என்று கெளதம் கூறவும், சனந்தா சிரித்து விட்டாள். “சரி நான் போய் தூங்குறேன் நீயும் போய் சாப்பிட்டு தூங்கு” என்று கௌதம் கூறி சென்றான்.

சனந்தா அவளது உடைமைகளை அனைத்தையும் அறையில் வைத்து விட்டு மாடியில் விக்ரம்காக காத்திருந்தாள். “எங்க போனாங்க??? எதுவும் ரொம்ப பெரிய பிரச்சனையா என்ன??? அப்படி தான் அவரோட குரலும் இருந்துது…. எதுவா இருந்தாலும் எல்லாமே நல்ல படியா முடியணும்” என்று மானசீகமாக வேண்டிக் கொண்டாள் சனந்தா.

சனந்தா விக்ரம்காக காத்திருக்க, அவளையும் மீறி அவள் மாடியில் கட்டிலின் மீது உறங்கியும் விட்டாள்.

கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல


எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 66
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.