Chapter 73

Bhavani Varun

Member
Jan 23, 2025
83
0
6
கௌதம் மற்றும் சனந்தா அவர் அவர்களின் வேலையை முடித்துவிட்டு கௌதம் தன்னுடைய சீனியர் ரெஃபர் செய்த ஆஃபீஸ்க்கு புறப்படவும், சனந்தா ஷாப்பிங் முடித்து அவளது வீட்டிற்கு வந்தடைந்தாள்.

சனந்தா வீட்டிற்கு வந்ததும் ஹாலில் அமர்ந்து கொண்டு சிறிது நேரம் லக்ஷ்மியிடம் பேசிக் கொண்டு இருந்தாள். “அம்மா நைட் கௌதம் வீட்டுக்கு வந்துருவான் நாங்க காலையில இங்கிருந்து கல்யாணத்துக்கு போக சரியா இருக்கும்” என்று சனந்தா கூறவும்,

“அப்படியா!!! ரொம்ப நாளாச்சு அவன் கிட்ட பேசி… இங்க வந்தப்ப கூட சும்மா வந்து என்னை பார்த்துட்டு போயிட்டான்… அவன் கூட பேசி ரொம்ப நாளாச்சு” என்று லக்ஷ்மி கூறவும், “அது என்னனே தெரியல உங்களுக்கு என்னடான்ன அவன் மேல அப்படி ஒரு பாசம்…. பிரகாஷ் அங்கிளுக்கு என்னன்னா என் மேல அப்படி ஒரு பாசம் அது என்ன தானோ போங்க” என்று சனந்தா சலித்துக் கொண்டு கூறினாள்.

“அது அப்படித் தான் சனா உங்க ரெண்டு பேருக்கும் கொஞ்சம் மாசம் தான் வயசு வித்தியாசம்… உங்க ரெண்டு பேரையும் நாங்க நாலு பேரு ஒன்னா தான் வளர்த்தோம்… அதுலயும் கௌதமோட அம்மா அவன் ரொம்ப சின்ன வயசா இருக்கும் போதே தவறிட்டாங்க அந்த நேரத்துல தான் விகாஷும் பொறந்திருந்தான்…. உங்க மூணு பேரையும் பார்த்துக்குறது தான் என்னுடைய பெரிய வேலையா இருக்கும்…. உங்க ரெண்டு பேரை விட கௌதமுக்கு அவங்க அம்மா இல்ல அப்படிங்கிற மறந்து அவன் என் கூட ஒட்டிட்டான்…. அதனால எனக்கு அவன் மேல ஒரு தனி பாசம் தான்…. பிரகாஷ் அண்ணனுக்கு பொண்ணு வேணுன்றது ரொம்ப ஆசை…. அதனால நீ பொறந்ததும் உன்ன அவர் நல்லா பார்த்துக்கிட்டாரு” என்று லக்ஷ்மி கூறினார்.

“எத்தனை வாட்டி ஏன் கௌதம் மேல இவ்ளோ பாசம் உங்களுக்கு அப்படின்னு கேட்டாலும் எல்லாவாட்டியும் அந்த பதிலை சொல்லிடுவீங்க நீங்க” என்று சனந்தா கேலியாக கூற, “அது அப்படித் தான் சனா” என்று புன்னகையுடன் லக்ஷ்மி கூறினார்.

“அதெல்லாம் இருக்கட்டும் அப்பா எங்க நான் காலையில போகும் போது கூட இல்லையே??” என்று சனந்தா கேட்க, “இல்லடா எதோ வேலை விஷயமா போயிருக்காங்க” என்று லக்ஷ்மி கூறினார்.

“சரி ஓகே மா நானும் கௌதமும் மதியம் வெளியில சாப்பிட்டு வந்துட்டோம் அதனால எனக்கு எதுவும் வேணாம்…. நான் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கிறேன் திருப்பி சாயந்திரம் போல கொஞ்சம் பேப்பர் ஒர்க் எல்லாம் இருக்கு எனக்கு… அப்புறம் இந்தாங்க பூ வாங்கிட்டு வந்தேன் உங்களுக்கு” என்று சனந்தா கூறி பூவை லக்ஷ்மியிடம் கொடுத்து மேலே அவளது அறைக்கு சென்று ஃபிரஷ் அப் ஆகி, அவளது கைபேசியை எடுத்துப் பார்க்க விக்ரம் இடமிருந்து எந்த குறுஞ்செய்தியும் வரவில்லை.

“என்ன இவரு மதியத்தில இருந்தே ஆள காணோமே… எங்க போனாரு…. ஒரு வேல ஏதாவது வேலையா இருப்பாரு போல… அவர் ஃப்ரீயானா அவரே கூப்பிடுவாரு” என்று அவளுக்கு சமாதானம் கூறிக் கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு மாலையில் அவளுடைய ரீசர்ச் பேப்பர் வேலையை செய்து கொண்டிருந்தாள் சனந்தா.

பிரகாஷ் விக்ரமுக்கு ஃபோன் செய்து, “விக்ரம் கொஞ்சம் ஊருக்கு வர முடியுமா??” என்று பிரகாஷ் கேட்கவும், “என்ன ஆச்சு சார் எதாவது முக்கியமான விஷயமா??” என்று விக்ரம் கேட்க, “கொஞ்சம் அப்படித் தான் பா இருக்கு நீ நேர்ல வந்தா நம்ம அந்த தகவலும் தெரிஞ்சிட்டு இன்னொரு பக்கம் விசாரணையும் செஞ்சுட்டு வரலாம்” என்று பிரகாஷ் கூற, “சரிங்க சார் நான் உடனே கிளம்பி வரேன்” என்று விக்ரம் கூறினான்.

“விக்ரம் நீ எதுக்கும் ஒரு செட் டிரஸ் எக்ஸ்ட்ராவா எடுத்துட்டு வா இங்க வேலை முடிய லேட் ஆகும்… இங்கேயே எப்படியும் நைட்டு தங்கற மாதிரி இருக்கும்” என்று பிரகாஷ் கூற, சரிங்க சார் என்று கூறி விக்ரம் கோயம்புத்தூருக்கு புறப்பட தயாரானான்.

சரவணன் விக்ரமை ஊட்டியில் பேருந்து நிலையத்தில் விடப் போக, “மச்சான் இங்க எல்லாம் பார்த்துக்கோ… சார் ஃபோன் பண்ணாரு நான் அங்க போய் அங்க என்ன ஏதுன்னு பார்த்துட்டு உனக்கு விவரம் சொல்றேன்…. நீ கல்யாணத்துக்கு நேரா வந்துரு அங்க இருந்து நம்ம கிளம்பிடலாம்” என்ற விக்ரம் கூறவும், “சரிடா…. அதே மாதிரி பண்றேன்… என்ன ஏதுன்னு எனக்கும் நீ ஃப்ரீயானதுக்கு அப்புறமா தகவல் சொல்லு… தைரியமா இரு” என்று சரவணன் கூறினான்.

“சரி மச்சான் நான் பார்த்துக்குறேன்… இதோ பஸ் ரெடியா இருக்கு நான் கிளம்புறேன்” என்று கூறி விக்ரம் பேருந்தில் ஏறி புறப்பட்டான்.

விக்ரம் பிரகாஷ் அழைத்த இடத்திற்கு வந்து சேரந்து, “சொல்லுங்க சார் என்ன ஆச்சு” என்று பதற்றத்துடன் விக்ரம் கேட்க, அங்கே சந்திரசேகரும் அமர்ந்திருந்தார். “எங்களுக்கு இதை எப்படி சொல்றதுன்னு தெரியல விக்ரம்…. நீ ஒரு நாள் ஃபோன் பண்ணி கேட்டல சனந்தாவுக்கு லிவர் டிரான்ஸ்பிளான்ட் நடந்தது தானேன்னு…” என்று பிரகாஷ் தயக்கத்துடன் கேட்டார்.

“ஆமா சார் என்ன ஆச்சு??” என்று விக்ரம் கேட்க, “இன்னிக்கு சனாவும் கௌதமும் தான் ஹாஸ்பிடலுக்கு செக்கப்க்கு போனாங்க… நாங்க எதுக்கும் லிவர் டாக்டர் கிட்டயும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தோம்… எப்பவுமே ஹாஸ்பிடலிருந்து எங்களுக்கு என்ன சொல்லுவாங்கன்னா கார்டியாக் டாக்டர் அண்ட் ஜெனரல் டாக்டர் தான் லிவருக்கும் சேர்த்து செக் பண்ணுவாங்கனு சொல்லுவாங்க…. நாங்களும் இத்தனை நாள் நம்பிட்டு இருந்தோம்”…

“ஆனா, இந்த வாட்டி நீ டவுட்டா சொன்னதுனால பிரத்தியேகமா லிவர் டாக்டர் கிட்ட நாங்க அப்பாயின்மென்ட் வாங்கினோம்… அதுவும் ஓரளவுக்கு விவரம் சொல்லி, வெளியில தெரியாத மாதிரி கௌதம்காக தான் அப்பாயின்மென்ட் வாங்கி செக் பண்ணவே சொன்னோம் சனாவ…. அந்த டாக்டரும் நமக்காக செக் பண்ணி ஹெல்ப் பண்ணாரு”….

“அப்படி செக் பண்ணி பார்க்கும் போது, சனாவுக்கு லிவர் ஆப்ரேஷன் நடக்கவே இல்லன்னு சொன்னாரு… அந்த சைடு ஒரு கீறலுக்கு போட்ட தையல் தானே தவிர அதுக்கும் லிவர் ஆப்ரேஷனுக்கும் எதுவுமே சம்பந்தமில்லை அப்படின்னு உறுதிப்படுத்திட்டாரு... அதுலயும் அந்த தையலே தேவயில்ல உங்களுக்கு சந்தேகம் வர கூடாதுன்னு தான் தையலே போட்டு இருக்காங்கனு சொன்னாரு” என்று பிரகாஷ் கூறவும் விக்ரம் அதிர்ச்சிக்குள்ளானான்.

“என்ன சார் இது இப்படி சொல்றீங்க!!!! எனக்கு தலையே சுத்துது…. அப்போ அபிலாஷ் கேட்டப்போ கூட ஏதோ ஒரு சந்தேகத்திலேயே தான் இருந்தேன் நானு… சனந்தாக்கு கூட எதுவும் பெருசா விவரம் தெரியல போல அதனால அவங்களுக்கும் ஒன்னும் தெரியலன்னு நினைச்சேன்…. இப்ப இத உறுதிப்படுத்தும் போது எனக்கு என்ன சொல்றதுனே தெரியல” என்று விக்ரம் குழப்பத்தில் கூறவும், “எங்களுக்கும் அப்படித் தான் விக்ரம் இருக்கு” என்று சந்திரசேகர் கூறினார்.

“அவங்க ஆக்சிடென்ட்ல தான் ஏதோ பிரச்சனைன்னு பார்த்தா இப்ப இங்க ஆர்கன் டிரான்ஸ்பிளான்ட்டுமே நடக்கல அப்படின்னா அப்புவோட லிவர் யாருக்கு தான் சார் போச்சு” என்று விக்ரம் வேதனையுடன் கேட்க, “அது இப்போதைக்கு தெரியல விக்ரம்…. ஆனா, உள்ளுக்குள்ள விசாரிக்க சொல்லி இருக்கேன் கூடிய சீக்கிரம் அந்த தகவலும் தெரிஞ்சுரும் நீ வருத்தப்படாத பா” என்று பிரகாஷ் ஆறுதல் கூறினார்.

“எப்படி சார் வருத்தப்படாம இருக்குறது… உங்களுக்கு தான் நாங்க கொடுத்தோம்னு நம்பிகிட்டு இருந்தோம்…. கண்ணு முன்னாடியே அப்புவோட உடல் உறுப்பு கொடுத்திருக்கோம் அப்படின்னு நினைச்சிட்டு இருக்கும் போது அது இல்லன்னு சொன்னா அப்ப யாருக்கு தான் போச்சுன்னு தெரியலையே சார்” என்ற விக்ரம் ஆதங்கத்துடன் கண் கலங்க கூறினான்.

சந்திரசேகர், “எல்லாமே கண்டுபிடிக்கலாம் விக்ரம்… நமக்கு ஒரு ஒரு விஷயம் தெரிய வரும் போது நம்ம தைரியத்தை இழக்காம அதிலிருந்து என்ன தகவல் நமக்கு கிடைக்குது, அதிலிருந்து என்ன உண்மை வெளிய எடுக்கலாம்னு யோசிக்கலாம்” என்று தைரியம் கூறவும், விக்ரம் சரி என்று ஆமோதித்தான்.

“அப்புறம் இன்னொரு விசாரணை பண்ண போலாம்னு சொன்னேன்ல… அது… அது வந்து பார்ட்டி அப்போ காளி மட்டும் இல்ல வேலு மணியும் அவனோட ஆட்களும் அங்க இருந்து இருக்காங்க… ஆனா அவங்க வந்தது பக்கத்து ஹோட்டல்ல ஏதோ ஒரு கல்யாணத்துக்காக வந்திருக்காங்க” என்று பிரகாஷ் கூறினார்.

“அப்படியா ரெண்டு பேருமேவா வந்துருக்காங்க… ஆனா, நாங்க சிசிடிவி ஃபுட்டேஜ் பார்க்கும் போது அப்படி யாரும் அவங்கள வந்து தேடி வந்த மாதிரியே தெரியலையே” என்று விக்ரம் கேட்க, “இல்லப்பா ஆளுங்க உடனே தான் வந்து இருக்காங்க… சிசிடிவி ஃபுட்டேஜ் கட் பண்ணி இருக்காங்க அப்பவே” என்று சந்திரசேகர் கூறினார்.

“எப்படி அவங்களால இவ்வளவு வேகமா வேலை பார்க்க முடியுது… அப்படி என்னத்த மறைக்கணும்னு இப்படி பண்றாங்கன்னு தெரியலையே” என்று விக்ரம் கூறவும், “இத தான் நம்ம ஒரு எட்டு போய் விசாரிச்சிட்டு வரலாம் வா” என்று பிரகாஷ் கூற, பிரகாஷ் விக்ரம் மற்றும் சந்திரசேகர் புறப்பட்டனர்.

மூவரும் அவர்களின் வேலையை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வரவும், லக்ஷ்மி பாதி தூக்கத்தில் கதவை திறந்தார். “என்னப்பா இவ்வளவு லேட் ஆயிருச்சு??” என்று லக்ஷ்மி கேட்க, “கொஞ்சம் வேலை ஜாஸ்தியாயிருச்சு” என்று சந்திரசேகர் கூறி, “இங்க பாரு யார் வந்திருக்காங்கனு” கூறவும், லக்ஷ்மி கண்களை கசக்கி கொண்டே பார்க்க விக்ரம் மற்றும் பிரகாஷ் நின்று கொண்டிருந்தனர்.

“நீங்க இந்த நேரத்தில!!!! விக்ரம் எப்படி இருக்க ஊர்ல எல்லாரும் எப்படி இருக்காங்க??” என்று லக்ஷ்மி நலம் விசாரிக்க, “எல்லாம் நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க??” என்று விக்ரம் பதிலுக்கு நலம் விசாரித்தான்.

“ஒரு வேலையா போனோம் நானும் விக்ரமும்…. அங்க சந்திரசேகர பார்த்தோம் மூணு பேரும் வீட்டுக்கு போகலாம் வான்னு கூப்பிட்டான்…. சரின்னு சொல்லி இங்க வந்துட்டோம்” என்று பிரகாஷ் கூறினார்.


“அப்படியா!!!! சரி ஓகே…. நீங்க ஃபிரஷ் அப் பண்ணிட்டு வாங்க சாப்பாடு எடுத்து வெக்கிறேன் சாப்பிட்டு படுத்துக்கோங்க” என்று லக்ஷ்மி கூறவும், “தப்பா எடுத்துக்காதீங்க எனக்கு சாப்பிட எதுவும் வேணாம்” என்று விக்ரம் தயக்கத்துடன் கூற, விக்ரமின் மனநிலையை புரிந்து கொண்டு, “ஆமா விக்ரம் சாப்பிட்டு தான் வந்தான் அதனால தான் வேணான்னு சொல்றான் போல” என்று பிரகாஷ் விக்ரமுக்கு பரிந்து பேசினார்.

“அப்படியா சரி சரி விக்ரம் நீ போய் தூங்கு நான் கௌதம வர சொல்றேன் உன்ன மேல ரூம்க்கு கூட்டிட்டு போவான்” என்று லக்ஷ்மி கூறி கௌதமை அழைக்கவும் கௌதம் கீழே வந்து விக்ரமை பார்க்க அதிர்ச்சிக்குள்ளானான்.


கருத்துக்கள் எதுவாயினும் வரவேற்கப்படும்
நன்றிகள் பல



எங்களது facebook குரூப்பில் இணைய இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

 

Author: Bhavani Varun
Article Title: Chapter 73
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.