நாயகன்-18

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
அத்தியாயம் 18: இது நடக்காது

தானாக ஒரு சேர் ஐ எடுத்து போட்டு நடு வீட்டில் அமர்ந்த விஜய் “எனக்கு உங்க எல்லார்கிட்டயும் ஒரு முக்கியமான விஷயத்தை பற்றி பேச வேண்டியது இருக்கு. அதான் மத்தவங்கள மட்டும் அனுப்புனா சரியா இருக்காதுன்னு நானே நேர்ல கிளம்பி வந்து இருக்கேன்." என்றான். அவனது வாயில் இருந்து இப்படி ஒவ்வொரு வார்த்தைகளாக வர, அமுதாவின் இதயம் படபடவென துடிக்க தொடங்கியது. ♥️

இவன் அப்படி தங்களிடம் பேச என்ன முக்கியமான விஷயம் இருக்கப் போகிறது? என்று நினைத்து அமுதாவின் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் எதுவும் புரியாமல் விஜய் ஜ பார்த்தார்கள். பள்ளிக்கு செல்ல கிளம்பி கொண்டு இருந்த அமுதாவின் அண்ணன் மகள்கள் தீபாவும் ஸ்வாதியும் விஜயை கண்ட சந்தோஷத்தில் துள்ளி குதித்து “சார் எங்க வீட்ல எல்லாருக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும். நாங்க உங்க கூட சேர்ந்து ஒரு செல்பி எடுத்துகிட்டுமா?" என்று கோரசாக கேட்க, “ஏய் பிள்ளைங்களா சும்மா இருங்க." என்ற அமுதாவின் அண்ணன் பாஸ்கரன் அவர்கள் இருவரின் கைகளையும் பிடித்து பின்னே இழுத்தான்.

ஆனால் மணிகண்டன் மட்டும் ஏதோ சரியில்லை என்று நினைத்து விஜய்யை கூர்மையான கண்களுடன் பார்த்துக் கொண்டு இருக்க, பார்ப்பதற்கு சினிமாவில் கிராம கதைகளில் காட்டப்படும் வில்லன்கள் போல பெரிய பெரிய மீசையை வைத்து கொண்டு கெத்தாக இருந்த அமுதாவின் அண்ணன்களை பார்த்து பயந்த டைரக்டர் ஸ்ரீகாந்த் “சார் இவங்க பாக்குற பார்வையே சரியில்ல. நம்ம இதுக்கு தான் வந்திருக்கோம்னு உண்மைய சொன்னா, எல்லாரும் ஒன்று கூடி நம்மள சத்தமே இல்லாம இங்கேயே போட்டு தள்ளிட போறாங்க." என்று விஜயின் காதுகளில் கிசுகிசுத்தான்.

“அவங்க அட்டாக் பண்ணா நம்மளும் பண்ணுவோம். அவங்களுக்கு கத்தி கடப்பாறைன்னா, நமக்கு டைரக்ட் ஆ பிஸ்டல் தான். சுட்டு தள்ளிட்டு போயிட்டே இருக்கலாம்." என்று தானும் அவனது காதுகளில் சொன்ன விஜய் அங்கே இருந்தவர்களை சுற்றி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவர்களில் பெரியவராக இருந்தது அமுதாவின் அண்ணன் மணிகண்டன் என்பதால் அவரைப் பார்த்து, “சார், நான் மெயினா உங்கள தான் பார்க்க வந்தேன். நேற்று உங்க தங்கச்சி அமுதா ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தப்போ நான் அவளை மீட் பண்ணி பேசினேன். அவ உங்களை எல்லாம் பத்தி சொன்னா." என்று தன் பேச்சை ஆரம்பித்தான் விஜய்.

அதனால் “எது அமுதா உங்களை பார்த்து பேசினாளா? எங்க கிட்ட எதுவும் சொல்லலையே!" என்ற மணிகண்டன் அமுதாவை பார்க்க, அவளுக்கு பயத்தில் வார்த்தையே வரவில்லை. அதனால் அவள் அமைதியாக திருத்திருவன விழித்துக் கொண்டு இருக்க, “என்ன மாமா நீ! நேத்து அவ லேட்டா வந்தான்னு மாறி மாறி எல்லாரும் திட்டிக்கிட்டே இருந்தீங்க. அதான் அவ இத சொல்லாம விட்டுருப்பா." என்று சொல்லி சமாளித்தான் வெற்றி. ஆனால் அப்போதும் இதெல்லாம் தேவையா? என்பது போல மணி அமுதாவையே பார்க்க, “ஆமா அண்ணா. ஏற்கனவே நீங்க எல்லாரும் திட்டிட்டு இருந்தீங்க. எனக்கு பசிக்க வேற செஞ்சது. அதான் அப்புறமா சொல்லிக்கலாம்னு விட்டுட்டேன்." என்று வெற்றிக்கு ஆமாம் சாமி போட்டாள் அமுதா.

அமுதா என்ன தான் உருட்டினாலும் தன் தங்கை நடக்கும் விஷயங்களை வீட்டில் உள்ளவர்களிடம் மறைப்பது மணிகண்டனுக்கு பிடிக்கவில்லை. அதனால் அவளை பார்த்து முறைத்தவன், வீட்டில் நாலு பேர் இருக்கும் போது அவளிடம் எதுவும் பேச வேண்டாம் என்று நினைத்து விஜயை பார்த்து “நீங்க பெரிய மனுஷன். நீங்க எங்க வீட்டுக்கு வந்தது எங்களுக்கு பெருமை தான். ஆனா நீங்க எங்கள பாத்து பேசுற அளவுக்கு நாங்க ஒன்னும் பெரிய ஆள் இல்லையே! அதான் எனக்கு எதுவும் பிடிப்படல." என்றார்.

அவரே நேராக விஷயத்திற்கு வந்து விட்டதால் இதற்கு மேல் இழுத்துக் கொண்டு செல்ல வேண்டாம் என்று நினைத்த விஜய் அமுதா மழையில் டான்ஸ் ஆடிய வீடியோவை தன் போனில் போட்டு அதை அனைவரும் பார்க்கும்படி முன்னே நீட்டியவன், “நான் புதுசா எடுக்க போற படத்துல உங்க ஊரு பிரசிடெண்ட் பொண்ணு அபிநயா நடிக்கிறதா இருந்தா உங்க எல்லாருக்கும் தெரியும்ன்னு நினைக்கிறேன். ஆனா நேத்து ஷூட்டிங்ல நாங்க எதிர்பார்த்த அளவுக்கு அவ நடிக்கல.

இதுக்கு மேலயும் அவ ஒழுங்கா நடிப்பானு எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த வீடியோவை பார்த்ததுக்கு அப்புறமா அந்த கேரக்டருக்கு அமுதா தான் கரெக்டா இருப்பான்னு எனக்கு தோணுது. இந்த மாதிரி கிராமத்தில இருக்கிற ஒரு சாதாரண பொண்ணு சினிமாவில நடிக்கிறதே பெரிய விஷயம். அதுவும் என்னோட படத்துல என் கூட செகண்ட் ஹீரோயினா நடிக்கிறதுக்கு அமுதா கொடுத்து வச்சிருக்கணும். இப்படி ஒரு சான்ஸ் கிடைக்கும்போது அதை வேணாம்னு சொல்றவங்க கண்டிப்பா முட்டாளா தான் இருப்பாங்க. நீங்க அப்படி இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன். நான் அமுதா கிட்ட எல்லாமே பேசிட்டேன். அவளுக்கு ஓகே தான். நீங்க ஏதாவது சொல்லுவிங்களோன்னு அவ பயப்படுறா. அதான் உங்ககிட்ட பேசிட்டு போலாம்னு நாங்க வந்தாேம்." என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான்.

ஒரு நொடி அவன் சொன்னதை கேட்டு ஷாக் ஆன மணி கோபமாக அமுதாவை பார்த்து “என்ன அமுதா இதெல்லாம்? ஏதோ ஒரு நாள் போய் சினிமாக்காரங்கள பார்த்த உடனே உனக்கும் சினிமாவுல நடிக்கணும்னு ஆசை வந்துடுச்சா? நான் அங்க போயிட்டு நீ சும்மா சுத்திக்கிட்டு இருந்துட்டு லேட்டா வந்ததற்கே இதெல்லாம் தேவையான கேட்டு உன்னை திட்டினேனா இல்லையா! அப்ப கூட இதை சொல்லணும்னு உனக்கு தோணல இல்ல! கரகாட்டக்காரன் மாதிரி இப்படி கேமரா முன்னாடி போய் நின்னு ஆட போறியா? அம்மா இல்லாத பிள்ளைன்னு உன்ன செல்லம் கொடுத்து வளத்துனதுக்கு நீ இப்படி தான் பண்ணுவியா?" என்று கோபமாக கேட்டார்.

“ஏன்னே இவ கிட்ட என்னென்னே பேச்சு? இவ பன்னிரண்டாவது படிச்சு முடிச்ச உடனே கல்யாணம் பண்ணி இவளை வீட்டோட இருக்க வெச்சிருக்கணும். நல்லா படிக்கிற பிள்ளையை படிக்க வைக்கணும்னு டவுனுக்கு அனுப்பி படிக்க வச்சீங்க இல்ல அந்த திமிரில தான் இவன் இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா." என்று கோபமாக பாஸ்கரன் கத்த, கண்களில் கண்ணீருடன் “அப்படி எல்லாம் இல்ல அண்ணா. இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததுனால, எனக்கு ஒரு ஆசை வந்துச்சு அவ்ளோ .தான்." தன் நிலை விளக்கம் கொடுத்தாள் அமுதா.

அதனால் தன் வேட்டியை தூக்கி மடித்து கட்டிக் கொண்டு “ஏன் டி ஆத்தா மாதிரி நினைச்சு அன்பா வளத்த பிள்ளையாச்சேன்னு பொறுமையா பேசினா, நீ என்கிட்டயே வாய்க்கு வாய் பேசுவியா?" என்று அடி தொண்டையில் இருந்து கத்தி காட்ட பாஸ்கரன் வேகமாக பாய்ந்து சென்று அமுதாவின் கன்னங்களில் மாறி மாறி அறைந்தான். அதனால் அமுதா தன் கன்னத்தில் கைகளை வைத்துக்கொண்டு தரையில் அமர்ந்து விட, வெற்றி வேகமாக சென்று அவனை தடுப்பதற்கு முன்பு அமுதாவின் முன்னே வந்து நின்ற விஜய் “இங்க பாருங்க நான் பொறுமையா யாருக்கும் எந்த பிரச்சனையும் வரக்கூடாதுன்னு நினைச்சு தான் டைரக்டர் கூட உங்க வீட்டுக்கு வந்து இருக்கேன். நீங்க தேவை இல்லாம இத பெருசாக்கிட்டே போறீங்க. அவ இந்த குடும்பத்துல பிறந்ததுக்காக அவளுக்கு பிடிச்ச எதையும் செய்யக்கூடாதுன்னு இல்ல. அவளுக்கு நடிக்க இன்ட்ரஸ்ட் இருக்குன்னு உங்க முன்னாடியே சொல்லிட்டா. என்கிட்டயும் சொல்லி இருக்கா.

அதை நான் ரெக்கார்ட் கூட பண்ணி வச்சிருக்கேன். இப்போ நீங்க எல்லாரும் சேர்ந்துக்கிட்டு அவளை நடிக்க விடாம ஏதாவது ப்ராப்ளம் பண்ணி அவளை டார்ச்சர் பண்ணா நான் சும்மா இருக்க மாட்டேன். அவ மேஜர். அவ லைஃப்ல முடிவு எடுக்க உங்க யாருக்கும் ரைட்ஸ் கிடையாது. அவ உங்கள பாத்து பயப்படுறதுனால தான் நானே இங்க வந்து உங்க கிட்ட பேசிட்டு இருக்கேன். என் முன்னாடியே அந்த பொண்ண இதுக்காக அடிக்கிற வேலையெல்லாம் வெச்சுக்காதீங்க." என்று கை நீட்டி பாஸ்கரனை எச்சரித்தான்.

“ஐயோ இவர் அமைதியா பேசினாலாவது எல்லார்கிட்டயும் பேசி சம்மதம் வாங்க ஒரு சான்ஸ் இருந்திருக்கும். இப்ப இவர் வேற மிரட்டுற மாதிரி பேசுறாரு. அவ்ளோ தான் ஜோலி முடிந்தது. எல்லாரும் அரிவாள தூக்கிக்கிட்டு சண்டைக்கு ரெடியாக போறாங்க." என்று நினைத்த வெற்றி “சார் சார் நீங்க சொல்ல வந்ததை சொல்லிட்டீங்க இல்ல! இதுக்கு மேல இவங்க கிட்ட நான் பேசிக்கிறேன். நீங்க கிளம்புங்க சார்." என்றான் வெற்றி.

“என்ன டா நடக்குது இங்க? இவன் நம்ம வீட்டு புள்ளையை நடிக்க வாடினு கூப்பிடுறான். நம்ம வீட்டுக்குள்ளேயே வந்து நின்னுகிட்டு என்கிட்டயே எகத்தாளமா பேசுறான். நீ எதுக்கு டா இவன பாத்து பம்புற? பணக்காரன்னா பெரிய புடுங்கியா? இவன பாத்து எல்லாரும் பயப்படனுமா?" என்று தன் இஷ்டத்திற்கு வாய்க்கு வந்ததை எல்லாம் பாஸ்கரன் பேசத் தொடங்கி இருக்க, அவன் விஜயை அடிக்க சென்றதால் வெற்றி அவனைத் தடுக்க முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

நிலமை கை மீறி செல்வதால் கடுப்பான விஜய் தனது பாடி கார்டுகளை ஒரு பார்வை பார்த்தான். இவ்வளவு நேரம் விஜய் இடம் இருந்து ஒரு கமெண்ட் வராதா என்று காத்திருந்த அவனது ஆட்கள் உடனே திபுதிபுவென கைகளில் மெஷின் Gun உடன் உள்ளே நுழைந்தார்கள். அதுவரை தான் பெரிய சண்டியர் என்பது போல சண்டையிட்டே தீருவேன் என்று சொல்லி கொண்டு இருந்த பாஸ்கரன் அந்த துப்பாக்கிகளை பார்த்தவுடன் அப்படியே வாயடைத்து போய் நின்று விட்டான்.

தன் வீட்டில் உள்ளவர்கள் விஜயை எதிர்த்து ஏதாவது செய்ய முயற்சி செய்தால் கண்டிப்பாக அவனது ஆட்கள் யோசிக்காமல் தன் குடும்பத்தினரை இல்லாமல் செய்து விடுவார்கள் என்று நினைத்து பதறிய அமுதா விஜயின் கால்களில் விழுந்து “சார் சார் ப்ளீஸ் சார்! எங்க அண்ணன் பேசுனதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். யாரையும் எதுவும் பண்ணிடாதீங்க. உங்க ஆளுங்கள வெளிய போக சொல்லுங்க." என்று கெஞ்சினாள். தன் தங்கை இப்படி எவனோ ஒருவனின் காலில் விழுந்து கெஞ்சுவதை பார்க்க முடியாமல் அவளை பிடித்து இழுத்த மணிகண்டன் தாங்கள் கோபப்பட்டால் விஜையையும் இந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியாது என்று உணர்ந்து “இங்க பாருங்க தம்பி சினிமால நடிக்கிறது எல்லாம் எங்க குடும்பத்துக்கு பெரிய விஷயம். தியேட்டருக்கே நாங்க எங்க வீட்டு பொம்பள புள்ளைங்கள தனியா அனுப்ப மாட்டோம். இதுல அவளை சினிமால நடிக்க அனுப்பி வைக்க சொல்றீங்களே இது நியாயமா? எங்க பழக்க வழக்கம் உங்களுக்கு புரியாது. தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பிருங்க. பிரச்சனை வேண்டாம்." என்று பொறுமையாக சொன்னார்.

- காதல் மலரும் 🌹
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-18
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.