நாயகன்-19

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
அத்தியாயம் 19: இதயம் உன்னை தேடுதே

தன் வீட்டில் உள்ளவர்கள் விஜயை எதிர்த்து ஏதாவது செய்ய முயற்சி செய்தால் கண்டிப்பாக அவனது ஆட்கள் யோசிக்காமல் தன் குடும்பத்தினரை இல்லாமல் செய்து விடுவார்கள் என்று நினைத்து பதறிய அமுதா விஜயின் கால்களில் விழுந்து “சார் சார் ப்ளீஸ் சார்! எங்க அண்ணன் பேசுனதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்கிறேன். யாரையும் எதுவும் பண்ணிடாதீங்க. உங்க ஆளுங்கள வெளிய போக சொல்லுங்க." என்று கெஞ்சினாள்.

தன் தங்கை இப்படி எவனோ ஒருவனின் காலில் விழுந்து கெஞ்சுவதை பார்க்க முடியாமல் அவளை பிடித்து இழுத்த மணிகண்டன் தாங்கள் கோபப்பட்டால் விஜையையும் இந்த சூழ்நிலையையும் சமாளிக்க முடியாது என்று உணர்ந்து “இங்க பாருங்க தம்பி சினிமால நடிக்கிறது எல்லாம் எங்க குடும்பத்துக்கு பெரிய விஷயம். தியேட்டருக்கே நாங்க எங்க வீட்டு பொம்பள புள்ளைங்கள தனியா அனுப்ப மாட்டோம். இதுல அவளை சினிமால நடிக்க அனுப்பி வைக்க சொல்றீங்களே இது நியாயமா? எங்க பழக்க வழக்கம் உங்களுக்கு புரியாது. தயவு செஞ்சு இங்க இருந்து கிளம்பிருங்க. பிரச்சனை வேண்டாம்." என்று பொறுமையாக சொன்னார்.

அவர் அப்படி பொறுமையாக பேச்சுவார்த்தைக்கு இறங்கி வந்து விட்டதால் தானும் சற்று இறங்கி செல்ல நினைத்த விஜய் தனது ஆட்களை வெளியில் செல்ல சொன்னவன், அமுதாவை கூர்மையான விழிகளுடன் பார்த்து “இங்க வா." என்றான். தன் அண்ணன் அடித்து விட்டதால் தரையில் அழுது கொண்டு இருந்த அமுதா அவன் கூப்பிட்டதும் எழுந்து செல்ல கூட தயங்கியவள், பாஸ்கரணையும் மணிகண்டனையும் மாறி மாறி பார்த்தாள். மணிகண்டனுக்கு அமுதாவால் இப்படி ஒரு பிரச்சனை வந்துவிட்டது என்று நினைக்கும் போதே அவள் மீது ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதனால் கோபமாக அவளை பார்த்து “அதான் வில்லங்கத்தை வீட்டுக்குள்ள இழுத்து விட்டுட்டியே அப்புறம் என்ன பார்வை கூப்பிடுறாரு இல்ல வா...!!" என்று கத்தினான்.

மணிகண்டன் தன்னை தான் வில்லங்கம் என்று குறிப்பிடுகிறான் என்று நினைத்த விஜய் “நீ என்னை எப்படி நினைச்சா என்ன..!! எனக்கு என் வேலை நடக்கணும். என் மேல உங்க எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கணும்." என்று நினைத்தவன் அமுதாவின் கண்களை பார்த்து “இங்க பாரு யாரை பார்த்தும் பயப்படாத. இப்ப இங்க நடந்ததை வச்சே என்னால என்ன வேணாலும் பண்ண முடியும் உனக்கு புரிந்திருக்கும். உன்னோட ஃபேமிலியில இருக்கிறவங்களுக்கு உனக்கு கிடைச்ச ஆப்பர்ச்சூனிட்டியோட அருமை தெரியாம இருக்கலாம். அவங்க பட்டிக்காட்டானுங்க மாதிரி நடந்துக்கலாம். But நீ படிச்ச பொண்ணு. So think wisely." என்று தனது கனீர் குரலில் சொன்னான்.

தன் குடும்பத்தில் உள்ளவர்களை ஒரு முறை சுற்றி பார்த்துவிட்டு இறுதியாக விஜயின் கண்களை பார்த்தாள் அமுதா. அவனைப் பார்த்தவுடன் அவனிடம் இருந்த கம்பீரமும் தைரியமும் அவளையும் ஒரு நொடி தொற்றிக் கொள்ள, ஏதோ அவன் மீது இருக்கும் ஒரு குருட்டு நம்பிக்கையில் “எனக்கு ஆக்டிங்ல இன்ட்ரஸ்ட் இருக்கு சார். அதுவும் உங்க கூட நடிக்கிற சான்ஸ் ஜ நான் மிஸ் பண்ண ரெடியா இல்ல." என்று ஒரே மூச்சாக சொல்லிவிட்டாள்.

என்ன தான் அமுதாவின் மீது கோபம் இருந்தாலும் கூட அவள் தங்கள் வீட்டு பெண். தனது வளர்ப்பு என்பதால் தங்கள் பேச்சை மீறி எந்த முடிவும் எடுக்க மாட்டாள் என்று நினைத்திருந்த மணிகண்டனுக்கு அவளது பதில் அமுதா அவரை அவமதித்துவிட்டதை போல இருந்தது. அதனால் அவர் தூக்கம் தொண்டையை அடைக்க கலங்கிய கண்களுடன் அப்படியே நின்று கொண்டு இருக்க, அவரையும் தன் தங்கையையும் மாறி மாறி பார்த்த பாஸ்கரன் மீண்டும் கோபத்தில் “ஏய் அறிவு கெட்டவளே..!! உன்ன படிக்க வச்சதுக்கு எங்களுக்கு இதெல்லாம் தேவையா? இப்படியே திமிர் எடுத்து திரிஞ்சினா உன்ன குத்தி போட்டுட்டு எங்க வீட்ல இப்படி ஒரு பிள்ளை இல்லைன்னு நினைச்சு நான் ஜெயிலுக்கு போயிடுவேண்டி." என்று சிலம்ப தொடங்கினான்.

அவன் மீண்டும் அமுதாவை அடிக்க பாய, அவனை தடுப்பதற்காக வெற்றி வேகமாக செல்வதற்குள் அமுதாவின் அருகில் நின்று கொண்டு இருந்த விஜய் அவள் கையை பிடித்து அவளை தனக்கு பின்னே நிற்க வைத்தவன் “நான் தான் சொல்றேன்ல பொறுமையா பேசுங்க இல்லனா நானும் என் பொறுமையை இழக்க வேண்டியது இருக்கும்ன்னு! நான் குத்தினாலும் கத்தி இறங்கும். ஆனா மொத்தமா உங்க எல்லாரையும் போட்டு தள்ளிட்டு என் மேல கேஸ் போடவே ஆள் இல்லாம என்னால பண்ண முடியும். பண்ணவா?" என்று தன் பற்களை கடித்துக் கொண்டு கேட்டான் விஜய்.

தன்னைவிட சிறியவனான விஜய் தங்கள் வீட்டுக்குள்ளே நின்று கொண்டு தன்னை இப்படி மிரட்டுவதால் இன்னும் கோபத்தில் கொந்தளிக்க தொடங்கிய பாஸ்கரன் “என்ன அண்ணா இவன் கிட்ட எல்லாம் பேச வேண்டி கிடக்குது! நீங்க நம்ம சதீஷ்க்கு கால் பண்ணி நம்ப ஆளுங்க சாதிக்காரன் எல்லாரையும் உடனே கிளம்பி வர சொல்லுங்க. இன்னைக்கு இவன் இந்த வீட்டை விட்டு உயிரோடு வெளியே போகக்கூடாது." என்று சத்தமாக கத்தினைன்.

உண்மையில் அமுதா தங்கள் கையை மீறி சென்று விட்டதால் இருந்த கோபத்தில் மணிகண்டனும் அதையே தான் நினைத்துக் கொண்டு இருந்தான். இதற்கு மேல் விஜய்யுடன் சமாதானமாக செல்வதில் அவனுக்கு விருப்பம் இல்லை. அதனால் மணிகண்டன் தனது பட்டன் ஃபோனை எடுத்து யாருக்கோ கால் செய்யப் போக, பாஸ்கரனின் கழுத்தில் தன் கையை வைத்து லாக் செய்து அவனை பின்ன இழுத்து அவனது நெற்றி பொட்டில் தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை வைத்த விஜய் “இப்ப கால் பண்ணுங்க மணிகண்டன். உங்க தம்பி டெட் பாடியை தூக்கிட்டு போறதுக்கு ஆள் வேணும் இல்ல..!!" என்று சொல்ல, தன் போனை கீழே போட்டுவிட்டு வேகமாக விஜயின் அருகே வந்து கையெடுத்து கும்பிட்டு “சார் சார் அவன் ஏதும் வாய் துடுக்கா பேசிட்டான். அதுக்காக அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதீங்க அவனை விட்டுருங்க." என்று கெஞ்சி கேட்டார். 🙏

இன்னொரு பக்கம் அமுதாவும் “சார் ஏதோ என் மேல இருக்கிற பாசத்துல எங்க அண்ணன் இப்படி எல்லாம் பேசிருச்சு. அதுக்காக கோவப்பட்டு அவரை எதுவும் பண்ணிடாதீங்க ப்ளீஸ்." என்று கெஞ்ச, அவளைப் பார்த்து முறைத்த பாஸ்கரன் தனது அண்ணன் மணிகண்டனிடம் “அண்ணே இவன் சுட்டா சுடட்டும். இப்ப என்ன? மானத்துக்காக உசுரவிட்ட பரம்பரை தான் நம்மளுது. இந்த சிரிக்கி மவ நம்ம பேச்சைக் கேட்காம சினிமாவில போய் அவுத்து போட்டுட்டு ஆடுறதுக்கு நீயே இவள கொன்னு போட்டுட்டு ஃபோன் பண்ணி நம்ம ஆளுங்கள வர சொல்லு. குடும்ப மானம் சந்தி சிரிச்சதுக்கு அப்புறம் நம்ம எல்லாம் இருந்து என்ன பிரயோஜனம்?" என்று சலம்பி கொண்டு இருந்தான்.

“ஐயோ மாமா நீ வேற சும்மா இரு அவரை ஏத்தி விடாத. எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்." என்று வெற்றி சொல்ல, பெண்கள் அனைவரும் தங்களது குழந்தைகளை கையில் பிடித்துக் கொண்டு இந்த சண்டைக்குள் வர பயந்தபடி ஒரு அறைக்குள் இருந்தவாறு வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். தனது குழந்தைகளை மணிகண்டனின் மனைவி அன்னபூரணியின் பொறுப்பில் விட்டுவிட்டு அந்த அறையில் இருந்து வெளியே ஓடி வந்த பாஸ்கரனின் மனைவி விஜயின் கால்களை பிடித்துக் கொண்டு “ஐயோ சார் என் புருஷன விட்டுருங்க சார். இந்த ஆளுக்கு ஏதாவது ஒன்னு ஆச்சுன்னா நானும் என் பிள்ளைகளும் அனாதை ஆயிடுவோம்." என்று கெஞ்சினாள். அதையும் தன் குடும்பத்திற்கு கௌரவ குறைச்சல் என்று நினைத்த பாஸ்கரன் தன் மனைவியை எட்டி உதைத்து “ஏய் மூதேவி உன்னை யாரு டி இங்க வர சொன்னா? என் புருஷன காப்பாத்துங்கன்னு கண்டவன் கால்ல விழுந்து கெஞ்சிகிட்டு இருக்க! மரியாதையா உள்ள ஓடிப்போய் ஒண்டிக்கோ. இல்லைனா நானே உன்னை அடிச்சு கொன்னுடுவேன்." என்று கத்தினான். 😡 🔥

அதனால் அழுது கொண்டே தரையில் இருந்து எழுந்த அவனது மனைவி “இப்படி வீட்டு பொம்பளைங்கள மதிக்க தெரியாம நடத்துற ஆம்பளைங்க எல்லாம் நாசமா தான்டா போவாங்க. என்ன இருந்தாலும் போய் தொலையுது. சரி கட்டின புருஷன் ஆச்சேன்னு உனக்காக ஓடி வந்தேன் பாரு என்ன சொல்லணும்." என்றவள் தனது சேலை முந்தானையால் அவளது கண்ணீரை துடைத்தபடி அங்கு இருந்து சென்று விட்டாள்.

இந்த பிரச்சனையை எப்படியாவது முடிவிற்கு கொண்டு வர வேண்டும் என்று நினைத்த வெற்றி “இப்ப என்ன மாமா உங்களுக்கு பயம்..!! நம்ம வீட்டு பொண்ணு அசிங்கமா நடிக்க கூடாது. சினிமாக்காரங்கள நம்பி அனுப்ப உங்களுக்கு தயக்கமா இருக்கு அது தானே! நான் வேணா அமுதா கூட போறேன். அவ மேனேஜர் மாதிரி அவ கூடயே இருக்கேன். அவளுக்கு எதுவும் ஆகாமல் நான் பார்த்துக்கிறேன். அப்புறம் என்ன? அமுதா ஆசைப்படுவதை நம்ம தானே செஞ்சு வைக்கணும்! என்ன நம்பி சரின்னு சொல்லுங்க." என்றவன் விஜய் பார்த்து “நான் சொன்னது உங்களுக்கு ஓகே தானே சார்! அமுதா கூட நானும் வரலாமா?" என்று கேட்டான்.

“சூட்டிங் ஏ உங்க ஊர்ல தானே நடக்க போகுது! நீங்க எத்தனை பேர் வேணாலும் செட்டில வந்து உட்கார்ந்து இருந்து ஷூட்டிங் ஜ பாருங்க யார் வேணாலும்ன்னு சொன்னா? நீ சொன்ன மாதிரி உன்னையே கூட அவளுக்கு மேனேஜரா அப்பாயிண்ட் பண்றேன். நீ அவ கூட இரு. அது இல்லாம எக்ஸ்ட்ரா ப்ரொடக்ஷன் வேணும்னாலும் நானே என் பர்சனல் பாடி கார்ட்ஸ்ல இருந்து நாலு பேர அமுதாவுக்கு பாதுகாப்பா அனுப்பி வைக்கிறேன். அவளுக்கு தனி கேரவன் கொடுக்க சொல்றேன். இதுக்கு மேல வேற ஏதாவது வேணும்னாலும் கேளுங்க பண்ணி தரேன்." என்று விஜய் சொல்லிவிட, தனது குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் சேர்ந்து விஜயை எதிர்த்து அமுதா திரைப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொன்னாலும் அவன் அதைக் கேட்டுக் கொண்டு இங்கு இருந்து செல்ல மாட்டான் என்று உணர்ந்த மணிகண்டன் வெற்றி எப்படி இருந்தாலும் அமுதாவுடன் இருக்க தானே போகிறான் என்று நினைத்து “சரி. டேய் வெற்றி உனக்காக நான் இதுக்கு சம்மதிக்கிறேன் டா. நீ தான் எல்லாத்தையும் கவனமாக இருந்து பார்த்துக்கணும்." என்றான் மணி
கண்டன்.


- காதல் மலரும் 🌹
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-19
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.